கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூர் ஆயுதப்படையின் பெயரால் பல போலியான சில விஷயங்கள் நடந்து வந்தது. சிங்கப்பூரில் உள்ள ஒரு உணவு நிறுவனத்திற்கு SAF அதிகாரிகளை பேசி, கிட்டத்தட்ட 150 பிரியாணி பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டது. அவர்களும் நமது நாட்டிற்காக பாடுபடும் அதிகாரிகள் என்பதால் பெரிய தள்ளுபடியுடன் உணவை தயார் செய்துள்ளனர். (SAF அதிகாரிகள் என்பதால் அந்த உணவகம் முன்பணம் கூட வாங்கவில்லை). ஆனால் ஆர்டர் ரெடி செய்தும் யாரும் வாங்க வராததால் ஏமாற்றம் அடைந்த கடைக்காரருக்கு, அதன் பிறகு தான் அது ஒரு போலியான ஆர்டர் என்று தெரியவந்தது.
தொடர்ச்சியாக சிங்கப்பூரில் உள்ள மற்றொரு பூ கடை மற்றும் மற்றொரு உணவகத்தில் இதே போல SAF பெயரால் சில போலி ஆர்டர்கள் பெறப்பட்டது அந்த நிறுவனங்கள் பெரிய பண இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் SAF வெளியிட்ட அறிக்கையில் இதுபோல SAF பெயரால் போலியான செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டாயம் மன்னிக்க முடியாது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் சீக்கிரம் பிடிபடுவார்கள் என்று கூறியது.
இந்த சூழலில் தான் கடந்த செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மிடில் ரோடு, உட்லண்ட்ஸ் தெரு 81 மற்றும் கண்டோன்மென்ட் சாலையைச் சுற்றியுள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மூவர் பிடிபட்டனர். இந்த இரு நாள் தேடுதல் நடவடிக்கையின் போது அதிகாரிகள் பல மின்னணு சாதனங்கள் மற்றும் சில கார்டுகளை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த மூவரும் ஒரு மோசடி கும்பலின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைதான அந்த மூன்று பேரில் சிங்கப்பூர் மத்திய காவல் பிரிவில் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ராஜாதி ராஜசிங்க மனமேந்திர படபடிலகே விஷ்வா மாதவி என்ற 22 வயது இலங்கை பெண்ணும் அடங்குவர். குறிப்பாக சொல்லப்போனால் இவர் மீது தான் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு அவர் கைதாகியுள்ளார்.