பதட்டமான சூழல் உலகெங்கும் நிலவும் நிலையில், இந்தியாவும் சிங்கப்பூரும் தங்கள் முக்கியமான உறவை “இரட்டிப்பு வலுவாக்க” இன்னும் அதிக காரணங்கள் உள்ளன என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். நேற்று புதன் கிழமை தனது இந்திய பயணத்தின் இரண்டாம் நாளில், இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நமது சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங்.
அந்த பேட்டியில், உலகம் ஆழமான சில மாற்றங்களுக்கு உள்ளாகும்போது கூட, சிங்கப்பூர் தன்னுடன் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் பணியாற்ற முடிகிறது என்று கூறினார். “குறிப்பாக இந்தியாவுடன் நாங்கள் அவ்வாறு செய்ய முடியும் என்று நம்புகிறோம், ஏனெனில் 60 ஆண்டுகால நட்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு மூலோபாய கூட்டாண்மை இந்தியாவுடன் எங்களுக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.
பிரதமராக தன்னுடைய முதல் இந்திய பயணத்தில், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு “வார்த்தைகள் மற்றும் சொல்லாட்சியை மட்டுமல்ல, உறுதியான நடவடிக்கை மற்றும் விளைவுகளையும்” அடிப்படையாகக் கொண்டது என்று திரு வோங் கூறினார். அண்மையில் நடந்த இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை (ISMR) கூட்டமைப்பு “தனித்துவமான” தன்மையை கொண்டது என்றார் அவர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய நமது சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங், “அவர் கருணையுள்ளவர், அன்பானவர் மற்றும் ISMR முன்வைத்த யோசனைகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பவர்” என்று விவரித்தார். மூன்றாவது ISMR ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது, துணைப் பிரதமர் கான் கிம் யோங் தற்போது சிங்கப்பூரின் ஈடுபாட்டை வழிநடத்தி, தொடர்ந்து நல்ல யோசனைகளை உருவாக்கி வருகிறார் என்றும் திரு. வோங் கூறினார்.