நமது அண்டை நாடான மலேசியா, வருகின்ற 2026ம் ஆண்டில் சிங்கப்பூரிலிருந்து சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது என்று சில செய்திகள் வெளியாகியுள்ளது. VM2026 அதாவது Visit Malaysia 2026 என்று ஒரு புதிய சுற்றுலா பிரச்சாரத்தை அந்நாடு துவங்கியுள்ளது. “விசிட் மலேசியா” என்பது சுற்றுலாப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அந்நாட்டின் இலக்கின் ஒரு பகுதியாகும், இது முதன்முதலில் கடந்த 1990ல் தொடங்கப்பட்டது.
ஆனால் 1990ம் ஆண்டு பிறகு வெகு சில முறைகள் மட்டுமே இந்த விசிட் மலேசியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இறுதியாக பெருந்தொற்று துவங்குவதற்கு முன்பாக கடந்த 2020ல் நடத்தப்பட்டது. சிங்கப்பூருக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் அஸ்பர் முகமது முஸ்தபார் ஒரு நேர்காணலில் பேசும்போது, மலேசியாவில், குறிப்பாக ஜோகூர் சிங்கப்பூருக்கு அருகாமையில் இருப்பதால், சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் தான் அங்கு வரும் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக உள்ளனர் என்று கூறினார்.
பெர்னாமாவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 12 மில்லியன் சிங்கப்பூரர்கள் மலேசியாவிற்கு வருகை தந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். 2026ம் ஆண்டுக்கு முன்பு அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். “2026ம் ஆண்டு, சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக 22 மில்லியன் சிங்கப்பூரர்களை மலேசியாவிற்கு வரவேற்பதே எங்கள் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் தற்போது உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாக இருப்பதாக வெளியான ஒரு அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார், இதனால் சிங்கப்பூரர்கள் பலர் அன்றாடத் சுற்றுலா தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜோகூரை விருப்பமான இடமாகத் தேர்வு செய்கின்றனர். “எல்லா சிங்கப்பூரர்களும் பணக்காரர்கள் அல்ல, பலர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் முஸ்தபார் கூறினார்.