சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மசாஜ் சென்டர் நடத்தியதற்காகவும், தனது ஊழியர் ஒருவர் பாலியல் சேவைகளை வழங்கியதை தடுக்காமல் இருந்ததற்காகவும் 81 வயது முதியவருக்கு இன்று புதன்கிழமை (ஜூலை 21) 18,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த முதியவர் மீது தற்போது இரண்டு குற்றச்சாற்றுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் COVID-19 “சர்க்யூட் பிரேக்கர்” அமலில் இருந்தபோது கடையை அனுமதி இன்றி நடத்தியது குறித்த குற்றச்சாட்டும் அவர் மீது பதியப்பட்டுள்ளது. அவருடைய மசாஜ் சென்டரில் நான்கு பெண் ஊழியர்கள் இருந்தனர், 33 முதல் 42 வயதுக்குட்பட்ட அந்த பெண்கள் சீன நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 17, 2020 அன்று மதியம் 12.15 மணியளவில், அத்தியாவசிய நோக்கங்களுக்காக யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதபோது, 32 வயதான சியோ ஜீ மின் சாமுவேல் மசாஜ் சென்டரின் பின்புற வாயில் வழியாக கடைக்குள் நுழைந்துள்ளார்.
மசாஜ் சேவைகள் கிடைக்குமா என்று அவர் கேட்க, 34 வயதான மசாஜ் செய்யும் பெண் அவரை முதல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று மசாஜ் வழங்கியது மட்டுமில்லாமல் அவருக்கு பாலியல் ரீதியான சேவைகளும் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரான 81 வயதான டூ செங் சான்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
