வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமாக உணவு மற்றும் பொருள் டெலிவரி வேலைகளை செய்வதை பொதுமக்கள் எளிதில் புகாரளிக்கக்கூடிய புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மனிதவள அமைச்சர் டாக்டர் கோ போ கூன், ஆகஸ்ட் 20 அன்று ஃபேஸ்புக் பதிவில் இதைத் தெரிவித்தார். இந்த வசதி விரைவில் MOM இணையதளத்தில் தனிப்பட்ட “ரிப்போர்ட் டேப்” வடிவில் சேர்க்கப்படும்.
இதற்கு முன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக டெலிவரி வேலையில் ஈடுபட்ட மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆன்லைன் டேப் அதிகாரப்பூர்வமாக செயல்படும் வரை, பொதுமக்கள் MOM-க்கு நேரடியாகவே சந்தேகப்படும் சம்பவங்களை புகாரளிக்கலாம்.
தேசிய டெலிவரி சேம்பியன்ஸ் அசோசியேஷன் குறிப்பிட்ட இடங்களில் MOM நடத்திய சோதனைகளுக்கு ஆதரவு அளித்த உள்ளூர் டெலிவரி ரைடர்களுக்கு டாக்டர் கோ நன்றி தெரிவித்தார்.
370-க்கும் மேற்பட்ட உள்ளூர் ரைடர்கள், தாங்கள் பணி நேரத்தில் இருந்தபோதும் சோதனைக்கு MOM அதிகாரிகளுக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
“உணவு டெலிவரி ரைடர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. அவர்கள் தங்கள் நேரத்தை நிறுத்தி எங்களுக்கு உதவியது சிறியகாரியமல்ல. அவர்களின் ஒத்துழைப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்,” என டாக்டர் கோ கூறினார்.
மேலும், “சட்டவிரோத டெலிவரி வேலை, நமது உள்ளூர் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு எதிரானது. அதனைத் தடுக்க மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பு சூழலை ஏற்படுத்த உதவுகின்றன” என்றார்.
அத்துடன், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களது சிக்கல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை Platform Workers Trilateral Group மேற்கொள்வதாகவும் டாக்டர் கோ கூறினார்.
இந்த புதிய ஆன்லைன் புகார் வசதி அறிமுகமாகும் நிலையில், சட்டவிரோத டெலிவரி வேலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.